தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய்!
நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா இன்று நடைபெற்ற நிலையில், தேரோட்டத்தின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சுமார் 10.30 மணியளவில் திருச்செங்கோடு நகரின் பிரதான வீதிகளில் அர்த்தநாரீசுவரர் கோவில் தேர் பொதுமக்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது, கூட்ட நெரிசலுக்கு இடையே நிலைதடுமாறிய ஹர்ஷவர்தன் (18) என்ற வாலிபர், நகர்ந்து கொண்டிருந்த தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த ஒரு கட்டிடத்தின் சுவற்றிற்கும் இடையே எதிர்பாராத விதமாக சிக்கிக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த ஹர்ஷவர்தனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாகத் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தின் போது சஷ்டிகன் (19) என்ற மற்றொரு இளைஞரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று அரசு நிதியுதவி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேர்த்திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தில் கோவிந்தராஜா என்பவரின் மகன் திரு.ஹர்ஷவர்தன் (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"

தேரோட்ட விபத்தில் உயிரிழந்த ஹர்ஷவர்தனின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவற்றுடன், விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஷ்டிகன் என்ற இளைஞருக்குத் தேவையான அனைத்து உயர்தரச் சிறப்புச் சிகிச்சைகளையும் தாமதமின்றி வழங்க மருத்துவக் குழுவினருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
