பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் விஜய் நெகிழ்ச்சி... இ-சேவை மைய ஊழியரின் தோளில் தட்டிக்கொடுத்து வாழ்த்து!

 
பெரம்பூர் விஜய்

சென்னை பெரம்பூர் தொகுதியில் தனது புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்குள்ள ஊழியர்களிடம் காட்டிய அன்பான அணுகுமுறை அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய எம்.எல்.ஏ அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இ-சேவை மையத்தை முதலமைச்சர் விஜய் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். இந்த அலுவலகத்திற்கான பிரத்யேக இணையதளம் மற்றும் மொபைல் செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும், தொகுதி பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகப் புகார் அளித்தால் அதன் மீது அதிகாரிகள் எவ்வாறு உடனடி நடவடிக்கை மேற்கொள்கிறார்கள் என்பது குறித்தும் சென்னை மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரிடம் கணினித் திரை மூலம் விரிவாக விளக்கமளித்தார்.

பெரம்பூர் விஜய்

மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு எத்தகை காலக்கெடுவுக்குள் தீர்வு காணப்படுகிறது என்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார். இ-சேவை மையத்தின் செயல்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், அங்கு கணினிப் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த தட்டச்சு மற்றும் தொழில்நுட்ப ஊழியரிடம் முதலமைச்சர் விஜய் நேரடியாகப் பேசினார்.

அப்போது, அரசுச் சேவைகளைத் தொகுதி மக்களுக்கு எவ்விதத் தொய்வும் இன்றி, அர்ப்பணிப்பு உணர்வோடு விரைந்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், அந்த ஊழியரின் தோளில் தட்டிக்கொடுத்துத் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழக முதலமைச்சரே தங்களது இருக்கைக்கு அருகில் வந்து, தோளில் தட்டி வாழ்த்தியதால் அந்த ஊழியரும், அங்குள்ள இதரப் பணியாளர்களும் நெகிழ்ச்சியில் திளைத்தனர்.