எடப்பாடியில் சுயோட்சை வேட்பாளருக்கு விஜய் ஆதரவு!

 
எடப்பாடி சுயோட்சை எடப்பாடி சுயோட்சை

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி முடிவால் அரசியல் களம் அதிரத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் இந்த நட்சத்திரத் தொகுதியில், விஜய்யின் இந்த மூவ் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு, தொழில்நுட்பக் காரணங்களால் தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு மாற்றாகத் தாக்கல் செய்யப்பட்ட மாற்று வேட்பாளர் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால், இத்தொகுதியில் தவெக போட்டியிட முடியாத சூழல் உருவானது. இது விஜய் மற்றும் அவரது கட்சித் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எடப்பாடி தவெக

இந்நிலையில், இத்தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் பிரேம்குமார் என்பவருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது 'எக்ஸ்'  பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய்:

"பிரேம்குமார் நீண்ட காலமாக நமது ரசிகர் மன்ற நிர்வாகியாகப் பணியாற்றியவர். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி  சின்னத்தில் வாக்களித்து அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்."

வேட்புமனுக்களைத் தள்ளுபடி செய்ய வைத்து, குறுக்கு வழியில் வெற்றியைத் தேட முயன்றவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும், பிரேம்குமாரின் வெற்றி மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்க வேண்டும் என்றும் விஜய் தனது பதிவில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி தவெக

எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையே நேரடிப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்யின் இந்த 'சுயேட்சை ஆதரவு' ஆட்டம் யாருடைய ஓட்டுகளைப் பிரிக்கும் என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.