முதல்வராகிறார் விஜய்... நாளை 3 மணிக்கு நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா!
தமிழக அரசியல் களத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பெரும் இழுபறிக்கு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு கிடைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று (மே 9) மாலை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கரை நேரில் சந்தித்துக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதங்களை வழங்கினார். நாளை மாலை 3 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் நாளை (மே 10) பிற்பகல் 3 மணிக்கு முறைப்படி பதவியேற்கிறார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். கோட்டையை ஆளப் போகும் தனது தலைவரின் பதவியேற்பைக் காணத் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் சென்னை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
விஜய்யின் இந்தப் புதிய பயணம் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையிலிருந்து விரைவில் க்ரீன் சிக்னல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போதே தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். நாளை பிற்பகல் முதல் தமிழகத்தின் ஆட்சிச் சக்கரம் புதிய வேகத்தில் சுழலப் போவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
