இன்று ஸ்டாலின் தொகுதி உட்பட 3 தொகுதியில் விஜய் பிரச்சாரம்.. முழு பயண விவரம்!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று சென்னையில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொள்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
இன்று மதியம் சரியாக 2 மணியளவில் பெரம்பூர் தொகுதியில் தனது முதல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் விஜய். அங்குப் போட்டியிடும் தவெக வேட்பாளரை ஆதரித்து மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

அதன் பின்னர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் மாலை 5 மணியளவில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். ஆளுங்கட்சியின் பலமான கோட்டையாகக் கருதப்படும் இந்தத் தொகுதியில் விஜய்யின் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்துப் பிரம்மாண்ட ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்கிறார்.

வாகனத்தைத் தொடர வேண்டாம்: விஜய்யின் பிரசார வாகனத்தை எக்காரணம் கொண்டும் பைக்குகளிலோ அல்லது கார்களிலோ யாரும் பின் தொடர வேண்டாம் எனத் தவெக தலைமை கண்டிப்புடன் கேட்டுக் கொண்டுள்ளது.
பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் வருகையையொட்டி இந்த மூன்று தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
