இன்று விஜய் திருச்சியில் பிரசாரம் - 'வாகனத்தைப் பின்தொடராதீங்க' - தொண்டர்களுக்கு என். ஆனந்த் கடும் எச்சரிக்கை!

 
விஜய் பிரச்சாரம் விஜய் பிரச்சாரம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், இன்று திருச்சியில் தனது முதல் கட்டப் பிரசாரத்தை மேற்கொள்கிறார். இன்று மதியம் 12.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மற்றும் வாகனப் பிரசாரம் நடைபெறுகிறது. இதற்கான அனுமதியைத் தேர்தல் ஆணையத்திடம் தவெக பெற்றுள்ளது.

பிரசாரத்தின்போது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தொண்டர்களுக்குச் சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். விஜய்யின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு எந்த வாகனங்களிலோ தொண்டர்கள் அறவே பின்தொடரக் கூடாது. இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தவெக விஜய்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் நேரில் வருவதைத் தவிர்த்துவிட்டு, நேரலையில் பிரசாரத்தைக் காணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பிரசார மேடைக்கு அருகே தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். மற்றவர்கள் பொதுமக்கள் பகுதியில் இருந்து ஒத்துழைப்பு தர வேண்டும்.

திருச்சியில் தற்போது வெயில் சதத்தைத் தாண்டிப் பதிவாகி வருவதால், பிரசாரத்திற்கு வரும் தொண்டர்களுக்காகத் தவெக சார்பில் குடிநீர் பந்தல்கள் மற்றும் அவசர மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தவெக விஜய்

திருச்சி கிழக்கு தொகுதியில் ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில், விஜய்யின் நேரடி வருகை அந்தத் தொகுதியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. "மக்களின் வெற்றித் தலைவர்" என்ற முழக்கத்துடன் தவெகவினர் திருச்சியை விழாக்கோலமாக மாற்றியுள்ளனர்.