வடசென்னையில் முகாமிடும் விஜய்... நாளை பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பிரசாரத்தைப் பெரம்பூர் தொகுதியில் நாளை தொடங்குகிறார். அவர் இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகப் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், இந்தப் பிரசாரம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரசாரத்திற்காக வடசென்னையில் தங்குவதற்கு ஏதுவாக, கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் ஒரு பங்களா தயார் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை அங்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் விஜய் பங்கேற்கிறார். நாளை முதல் இரண்டு நாட்களுக்குப் பெரம்பூர் தொகுதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று திறந்த வாகனத்தில் அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.

தவெக நடத்திய உள்கட்சி ஆய்வில், பெரம்பூர் தொகுதி விஜய்க்கு மிகவும் சாதகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. சென்னையில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளில் ஒன்றான இங்கு இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு தவெக-விற்கு அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

விஜய் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், நாளை அவர் பேசவிருக்கும் அரசியல் கருத்துக்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் தமிழக அரசியலில் புதிய அலைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னையைத் தனது முதல் பிரசாரக் களமாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம், அடித்தட்டு மக்களின் ஆதரவைத் திரட்ட விஜய் திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. ஏற்கனவே பெரம்பூர் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் (திமுக) மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள நிலையில், அங்கு நட்சத்திரப் போட்டி நிலவப்போவது உறுதி.
