“விஜய் ஆட்சி அமைக்க முடியாது..” சென்னையில் ரசிகர் தற்கொலை முயற்சி!
சென்னையில் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் 42 வயது மாரிமுத்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். நேற்று தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது, தற்போது நிலவும் அரசியல் சூழலில் விஜய் ஆட்சி அமைக்க முடியாது என நண்பர்கள் அவரை வம்பிழுத்துக் கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தனது தலைவன் அரியணையில் ஏறமாட்டார் என்ற பேச்சால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

தன்னால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனத் தனது மனைவியிடம் கூறிப் புலம்பிய மாரிமுத்து, வீட்டில் இருந்த கொசுவர்த்தி சுருளை தண்ணீரில் கரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்குப் போராடிய அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு நடிகருக்காகத் தொழிலாளி உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் ரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் எனச் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தலைவர்கள் தங்களது அரசியல் நகர்வுகளை நிதானமாகக் கையாண்டு வரும் நிலையில், தொண்டர்கள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டுத் தங்களது இன்னுயிரைப் பணயம் வைப்பது வேதனையளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
