“விஜய் யாருக்கும் தீங்கிழைக்காதவர்... அவர் குணம் இன்னைக்கும் மாறவில்லை” - நடிகை கவுசல்யா புகழாரம்!

 
விஜய் கவுசல்யா விஜய் கவுசல்யா

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், திரையுலகினர் பலரும் தங்களது அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படையாக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், 'பிரியமுடன்', 'நேருக்கு நேர்' போன்ற படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை கவுசல்யா, தவெக தலைவர் விஜய் குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய்யின் ஆரம்பகால வெற்றிப் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்த கவுசல்யா, விஜய்யின் பணிவு குறித்துப் பேசுகையில்,  "விஜய் யாரிடமும் விரோதம் பாராட்டாதவர்; யாருக்கும் தீமை நினைக்காத ஒரு நல்ல மனிதர்.

தவெக விஜய் பிரசாரம்

படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே கேட்டு நடப்பார். ஈகோ பார்க்காமல் பணிபுரிவது அவரது தனிச்சிறப்பு," எனப் பாராட்டியுள்ளார். நடிகராக இருந்த விஜய்க்கும், தற்போது அரசியல்வாதியாக இருக்கும் விஜய்க்கும் பெரிய அளவில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"அன்று அவர் ஒரு அமைதியான நடிகர், இன்று ஒரு கட்சியின் தலைவர். பதவி வந்தாலும் அவரது எளிமையான குணம் மட்டும் மாறவே இல்லை. தமிழகம் முழுவதும் அவருக்கு இருக்கும் பிரம்மாண்டமான ரசிகர் பலத்தைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. மக்கள் அவர் மீது வைத்துள்ள அன்பு பிரமிக்க வைக்கிறது," என கவுசல்யா தெரிவித்துள்ளார்.

விஜய் பிரச்சாரம்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அவருடன் நடித்த சக கலைஞர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் கவுசல்யாவின் இந்தப் பேச்சும், தென் மாவட்டங்களில் ரோடு ஷோ நடத்தி வரும் விஜய்க்குப் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.