இன்று பெரம்பூரில் விஜய் வேட்புமனுத் தாக்கல்... ஆதவ் அர்ஜுனாவுக்கு வாக்கு கேட்டு ’ரோடு ஷோ’!
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் வேட்பாளர் பட்டியலை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட நிலையில், இன்று மதியம் தனது முதல் வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறார்.
இன்று மதியம் சரியாக 12 மணியளவில் விஜய் பெரம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் (அம்பேத்கர் கல்லூரி) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது வேட்புமனுவில் "சி. ஜோசப் விஜய்" என்ற பெயரிலேயே அவர் போட்டியிடுகிறார். விஜய் இந்தத் தேர்தலில் இரண்டு முக்கியமான நகர்ப்புறத் தொகுதிகளில் களம் காண்கிறார்.

பெரம்பூரில் திமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ ஆர்.டி. சேகரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி கிழக்கு தொகுதியிலும் அவர் களம் இறங்குவது அவரது அரசியல் செல்வாக்கை மாநிலம் முழுவதும் நிரூபிக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு, இன்று மதியம் 2 மணி முதல் பெரம்பூர், கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் தனது முதல் அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். தனது கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து அவர் மேற்கொள்ளும் இந்த ரோடு ஷோ, தவெக தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
