தன்னுடைய கார் டிரைவர் மகனுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்! விருகம்பாக்கத்தில் சபரிநாதன் போட்டி!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அறிமுக விழாவில் பல ஆச்சரியங்கள் நிறைந்திருந்தாலும், விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. நடிகர் விஜய்யின் நம்பிக்கைக்குரிய ஓட்டுநர் ராஜேந்திரனின் மகன் சபரிநாதன், அந்தத் தொகுதியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக விஜய்யின் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். விஜய் எங்குச் சென்றாலும் அவருக்குப் பின்னால் ஒரு பாதுகாப்பு அரணாக இருப்பவர் ராஜேந்திரன். விஜய்யின் மிக நெருக்கமான வட்டாரத்தில்இவருக்கு மிக முக்கியமான இடம் உண்டு.
தன்னிடம் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் என்பவரின் மகன் சபரி நாதனை விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவித்த தவெக தலைவர் விஜய்..
— Top Tamil News (@toptamilnews) March 29, 2026
வேட்பாளராக அறிவித்தவுடன் விஜயிடம் ஆசி பெற்ற சபரிநாதன் உணர்ச்சி பொங்க கண் கலங்கிய காட்சி#TVKVijay #Virugambakkam #Sabarinathan… pic.twitter.com/wXJjVchUyY
வேட்பாளர் அறிமுக மேடையில் தனது தந்தை ராஜேந்திரனுடன் சென்று விஜய்யைச் சந்தித்த சபரிநாதன், உணர்ச்சிவசப்பட்டு விஜய்யின் காலில் விழுந்து கண்கலங்கினார். ஒரு சாதாரண உழைப்பாளியின் மகனுக்குச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததன் மூலம், "விசுவாசத்திற்குத் தான் என்றும் மதிப்பளிப்பவன்" என்பதை விஜய் மீண்டும் நிரூபித்துள்ளதாகத் தொண்டர்கள் சிலாகித்துப் பேசுகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் முக்கியத் தொகுதியான விருகம்பாக்கத்தில் திமுக மற்றும் அதிமுகவின் பலமான வேட்பாளர்களை எதிர்த்துச் சபரிநாதன் களம் காண்கிறார். ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரை விஜய் களம் இறக்கியிருப்பது அந்தத் தொகுதி இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
