“விஜய்க்கு பெண்களிடம் செல்வாக்கு அதிகம்” - மாவட்ட நிர்வாகிகள் அலட்சியப்படுத்தியதாக திமுக கள ஆய்வுக் குழு தகவல்
அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் தோல்வி குறித்து ஆராய திமுக அமைத்த உயர்மட்டக் கள ஆய்வுக் குழு, கட்சியின் தலைமைக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் மேலும் ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி.எம்.விஜய்க்கு மகளிர் வாக்காளர்கள் மத்தியில் இருந்த அசுரத்தனமான செல்வாக்கை திமுகவின் மாவட்ட அளவிலான தலைமை சரிவரக் கணிக்கத் தவறிவிட்டது இத்தோல்விக்கு முக்கியக் காரணம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கள ஆய்வுக் குழுவின் அறிக்கையில், தேர்தல் களத்தில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகப் பெண் வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய அலை வீசியதை அடிமட்டத் தொொண்டர்களும், கிளைக் கழகப் பொறுப்பாளர்களும் முன்கூட்டியே கண்டறிந்துள்ளனர். இந்தத் தகவலை அவர்கள் மாவட்ட அளவிலான உயர் நிர்வாகிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, மகளிர் வாக்குகளைத் தக்கவைக்கச் சிறப்பு உத்திகளைக் கையாள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகிகள் கீழ்மட்டப் பொறுப்பாளர்களின் இந்த எச்சரிக்கைகளைப் போதிய அளவில் கவனத்தில் கொள்ளாமலும், விஜய்யின் அரசியல் வருகையைக் குறைத்து மதிப்பிட்டும் அலட்சியமாக இருந்துவிட்டனர் என்று கள ஆய்வுக் குழு தனது அறிக்கையில் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.
திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியாகக் கருதப்படும் பெண் வாக்காளர்களை, தவெக தலைவர் விஜய் தனது அரசியல் பிரகடனங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் பெருமளவில் கவர்ந்துள்ளார். குடும்பத் தலைவிகள் மற்றும் இளம் பெண் வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு இருந்த இந்தத் தனிப்பட்ட செல்வாக்கு, தேர்தலின் போது தவெகவிற்குச் சாதகமான வாக்குகளாக மாறியுள்ளது.

இதனை முன்கூட்டியே கணித்துத் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய மாவட்ட நிர்வாகிகளின் இந்தத் திட்டமிடல் குறைபாடே, பல தொகுதிகளில் திமுகவின் தோல்விக்குக் காரணியாக அமைந்துவிட்டது என அறிக்கை விவரித்துள்ளது. ஏற்கெனவே மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில் பெண்கள் மத்தியில் அதிருப்தி நிலவிய சூழலில், விஜய்யின் இந்தச் செல்வாக்கு கட்சியின் பின்னடைவை மேலும் அதிகப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
