வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ.க்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை!

 
விஜய் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று மதியம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய எம்.எல்.ஏ.க்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் தவெக நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க இமாலய வெற்றியைத் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்புகள் வழங்கியும் வெடி வெடித்தும் மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

தவெக விஜய்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர். கூட்டத்தின் முக்கிய நிகழ்வாக, விஜய் சட்டமன்ற தவெக குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

இதற்கான ஆதரவுக் கடிதத்தில் புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்திட உள்ளனர். மேலும், தேர்தலில் கடினமாக உழைத்து வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு விஜய் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்க உள்ளார்.

தவெக விஜய்

ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ள இந்தக் கூட்டத்தில், தவெக சார்பில் அமைச்சர்களாகப் போகும் நபர்கள் குறித்த பட்டியலும் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் தவெக அமைச்சரவைப் பட்டியல் வைரலாகி வரும் நிலையில், இன்றைய கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள விஜய், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்தத் தீர்மானமான கூட்டத்தில் விவாதிக்க உள்ளார்.