வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ-க்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை!

 
விஜய் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (மே 5) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய எம்எல்ஏ-க்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து தவெக முதலிடம் பிடித்தது. இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தவெக விஜய்

இந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் பங்கேற்கின்றனர். கூட்டத்தின் ஒரு பகுதியாக, விஜய் சட்டசபை தவெக குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கான ஆதரவுக் கடிதத்தில் புதிய எம்எல்ஏ-க்கள் அனைவரும் கையெழுத்திட உள்ளனர். மேலும், ஆட்சியமைக்கத் தேவையான எஞ்சிய 10 இடங்களுக்குப் பிற கட்சிகளின் ஆதரவைப் பெறுவது அல்லது கூட்டணி அமைப்பது குறித்து இந்தத் தீர்மானமான கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

விஜய்

தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற போதிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்களைக் களைவது குறித்து ஆளுநரைச் சந்திப்பதற்கு முன்பாக இந்த ஆலோசனை நடத்தப்படுகிறது. தவெக-விற்கு ஆதரவு அளிக்க முன்வரும் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் பதவியேற்பதற்கான அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் இக்கூட்டத்திற்குப் பிறகே இறுதி செய்யப்படும் என்பதால், பனையூர் கட்சி அலுவலகம் தற்போது பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.