"உழைப்பால் உயர்ந்தவர் விஜய்!" - நடிகர் கவுண்டமணி வாழ்த்து!
தமிழக அரசியல் களத்தில் முதல் தேர்தலிலேயே 108 இடங்களை வென்று சரித்திரம் படைத்துள்ள நடிகர் விஜய்க்குத் திரைத்துறையினர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில், நகைச்சுவை சக்ரவர்த்தி கவுண்டமணி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வைரலாகி வருகிறது.
விஜய்யின் அரசியல் வெற்றியைப் பாராட்டி கவுண்டமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தம்பி விஜய் தனது கடுமையான உழைப்பால் திரைத்துறையில் உயர்ந்தவர். அதே உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இப்போது அரசியலிலும் காட்டி வெற்றி பெற்றுள்ளார். அவரது இந்த மகத்தான வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் பணியிலும் அவர் மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும்."

விஜய் ஆரம்ப காலத்தில் நடித்த 'ரசிகன்' உள்ளிட்ட சில படங்களில் கவுண்டமணியுடன் இணைந்து நடித்துள்ளார். பழைய நினைவுகளையும் விஜய்யின் விடாமுயற்சியையும் நினைவுகூரும் வகையில் கவுண்டமணியின் இந்த வாழ்த்து அமைந்துள்ளது.

நேற்று (மே 4) வெளியான தேர்தல் முடிவுகளில் தவெக 108 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ள நிலையில், கவுண்டமணி போன்ற மூத்த கலைஞர்களின் வாழ்த்துகள் அக்கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளன.
