"விஜய் ஒரு அட்டக்கத்தி... ஓட ஓட விரட்டுவோம்!" - அறிவாலயத்தில் பி.டி. செல்வகுமார் பேட்டி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வேட்பாளர் நேர்காணல் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பி.டி. செல்வகுமார், தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது அரசியல் நகர்வுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
விஜய்யுடன் நீண்ட காலம் பணியாற்றிய பி.டி. செல்வகுமார், தவெக-வின் செயல்பாடுகள் குறித்துப் பேசுகையில், "விஜய் செய்யும் எதிலும் ஒரு முறையான திட்டமிடல் இல்லை. ஒரு கட்சியைக் கட்டமைப்பது என்பது வெறும் ரசிகர் மன்றத்தை நடத்துவது போன்றது அல்ல. தமிழக வெற்றிக் கழகம் என்பது ஒரு முழுமையான அரசியல் கட்சியே கிடையாது. அதன் செயல்பாடுகள் அனைத்தும் முதிர்ச்சியற்ற நிலையில் உள்ளன" என்று விமர்சித்தார்.
விஜய்யின் முதலமைச்சர் ஆசை குறித்துப் பேசிய அவர், "திடீரென்று அரசியலுக்கு வந்து ஒரே நாளில் முதலமைச்சர் ஆகிவிடலாம் என விஜய் பகல் கனவு காண்கிறார். அரசியலில் பல ஆண்டுகாலம் உழைத்தவர்களுக்கே கிடைக்காத அங்கீகாரம், சினிமா புகழை வைத்து மட்டும் கிடைத்துவிடாது. விஜய் மக்களைச் சந்திப்பதில்லை, அவர்களின் கள யதார்த்தம் அவருக்குத் தெரியவில்லை" என்று சாடினார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசுகையில், "வரும் தேர்தலில் தவெக-வின் நிலை என்னவென்று மக்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள். விஜய்யை அரசியலை விட்டு ஓட ஓட விரட்டுவோம். திமுகவின் 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனை முன்னால் இவர்களுடைய மாய பிம்பம் காணாமல் போய்விடும்" என்று சவால் விடுத்தார்.

பி.டி. செல்வகுமார் பல ஆண்டுகளாக விஜய்யின் பி.ஆர்.ஓ மற்றும் மேலாளராகப் பணியாற்றியவர். விஜய்யின் ஆரம்பகால அரசியல் நகர்வுகளில் முக்கியப் பங்காற்றிய அவர், சில கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து, சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இன்று ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற அதே நேர்காணல் நிகழ்வில் இவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
