களம் காணத் தயாராகும் விஜய்... தஞ்சையில் தவெக பிரம்மாண்டக் கூட்டம்:

 
தவெக விஜய்

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், அடுத்த மாதம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தவெக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் அல்லது நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற விஜய், "2026 போர் நமக்கும் திமுகவுக்கும் தான்" என்று அதிரடியாகப் பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது டெல்டா மண்டலமான தஞ்சாவூரில் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வைத் தொடங்கவுள்ளார்.

தவெக விஜய்

தஞ்சை மாவட்டத்திற்கான இந்தக் கூட்டம் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் நடத்தத் தவெக தலைமை முடிவு செய்துள்ளது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்பதால், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரிய மைதானங்களைத் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தவிர்க்க, இம்முறையும் QR கோடு வசதியுடன் கூடிய அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், திறந்தவெளி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்தினால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போலீசாரிடம் அனுமதி கோரப்பட உள்ளது.

ஜனநாயகன் விஜய்

அரசியல் களத்தில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய பிறகு விஜய் முதல்முறையாகத் தஞ்சைக்கு வருவதால், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்தக் கூட்டத்தில் 2026 தேர்தலுக்கான புதிய வியூகங்கள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த சில மறைமுக அறிவிப்புகள் வரலாம் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.