"விஜய்க்கு அருகதையே இல்லை - ஜனநாயகன் படத்தை அவரே ரிலீஸ் செய்தார்.. விளாசிய அர்ஜுன் சம்பத்!

 
விஜய் அர்ஜுன் சம்பத் விஜய் அர்ஜுன் சம்பத்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜய் மற்றும் தவெக-வை கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

தவெக தலைவர் விஜய், பாஜக மற்றும் அதிமுகவை விமர்சித்து வருவதற்குப் பதிலடி கொடுத்த அர்ஜுன் சம்பத், "தேர்தலுக்காக விஜய் ஏதேதோ வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். பாஜக மற்றும் அதிமுகவை விமர்சிக்க ஜோசப் விஜய்க்கு எந்த அருகதையும் இல்லை. உண்மையில் அவரது 'ஜனநாயகன்' படத்தை அவரேதான் இணையத்தில் வெளியிட்டுக் கொண்டார். இப்படிப்பட்டவர் மற்றவர்களைப் பேசுவதா?" எனப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். (குறிப்பு: விஜய் நடித்த 'தமிழன்' படம் 'ஜனநாயகன்' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது).

அர்ஜுன் சம்பத்

அதிமுக-பாஜக உறவு குறித்துப் பேசிய அவர், "அதிமுக மற்றும் பாஜக என்பது இயற்கையான கூட்டணி. எடப்பாடி பழனிச்சாமி ஆன்மீக நகரங்கள் அனைத்தையும் தாமரை மலர ஒதுக்கியுள்ளார். மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்கும்" என்றார்.

அர்ஜுன் சம்பத்

தமிழகத்தில் அதிமுக தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தவுடன், திருவண்ணாமலை கிரிவலப் பாதை மற்றும் உலகெங்கிலும் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை உலகத்தரம் வாய்ந்ததாக மேம்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.