"குதிரை பேரத்தின் நம்பர் ஒன் குற்றவாளி விஜய் தான்" - திமுக பதிலடி!

 
திமுக

தவெக - திமுக இடையேயான உள்கட்சி உரசல்களும், 'குதிரை பேர'க் குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியல் களத்தில் உச்சகட்டப் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கத் திமுக முயற்சிப்பதாகத் தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நேற்று முன்வைத்த பகிரங்கக் குற்றச்சாட்டுக்குத் திமுக தலைமை மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், தவெக மீதே பழிசுமத்திப் பதிலடி கொடுத்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன், தவெக அமைச்சர்களின் புகார்களை முற்றிலும் நிராகரித்துப் பேசினார். "முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று 50 நாட்களைக் கடந்த நிலையிலும், தவெகவின் தற்போதைய அரசு மிகவும் பலவீனமான உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அரசு எந்த நேரத்திலும் தானாகவே சீட்டுக்கட்டுப் போல் சரிந்து விழும் நிலையில் தான் தள்ளாடிக் கொண்டிருக்கிறது."

தவெக பேரம் செந்தில்பாலாஜி

"தவறைத் திமுக மீது சுமத்தித் தப்பிக்கப் பார்க்கிறார்கள். உண்மையில், கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே, தங்களது பலத்தை எப்படியாவது பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தவெக தரப்புதான் மற்ற கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளிடம் ரகசியமாகக் குதிரை பேரத்தில் ஈடுபட்டது" என்று குற்றம் சாட்டினார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் வெளியிட்டிருந்த உள்கட்சி விவகாரங்களைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், தவெக தலைமையை மிகக் கடுமையாக விமர்சித்தார். "அரசியலில் தூய்மை என்று பேசும் முதல்வர் விஜய்யின் இந்த ரகசியக் குதிரை பேர உத்திகளை, கூட்டணித் தலைவரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களே அண்மையில் பகிரங்கமாக அம்பலப்படுத்திவிட்டார். எனவே, தமிழக அரசியலில் குதிரை பேரத்தின் 'நம்பர் ஒன் குற்றவாளி' முதல்வர் விஜய்தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தங்களது சுயநல அரசியல் நகர்வுகளையும், உள்கட்சிப் பூசல்களையும் மறைப்பதற்காகவே  திட்டமிட்டுத் திமுக மீது அவர்கள் பழிசுமத்தி வருகிறார்கள்."