மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் மோடியிடம் விஜய் கோரிக்கை!
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.சென்னை ஐஐடியில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார். அப்போது, சென்னை நகரத்தின் வளர்ச்சி மட்டுமின்றி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கும், ஓசூர்–பெங்களூரு திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான தமிழக அரசின் முந்தைய முயற்சிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. பயணிகள் எண்ணிக்கை, திட்டத்தின் செலவு மற்றும் மெட்ரோ ரயிலின் தேவை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மத்திய அரசு கேள்விகளை எழுப்பியிருந்தது. மாற்றாக, பேருந்து அடிப்படையிலான விரைவுப் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவது குறித்தும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில், இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் விஜய் மீண்டும் முன்வைத்துள்ளார். திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்குமா என்பது அடுத்தகட்ட முடிவுகளைப் பொறுத்தே தெரியவரும்.மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் விஜய் கோரிக்கை விடுத்தார். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் மக்களின் வாழ்க்கையில் நேரடியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
