பாரதிராஜா உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி - சீமான், கங்கை அமரனும் நேரில் அஞ்சலி!
இன்று அதிகாலை காலமான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் உடலுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா, இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரையுலகினரும், ரசிகர்களும் அவரது இல்லத்தில் திரளத் தொடங்கினர்.

முதலமைச்சர் விஜய், நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு சென்று, இயக்குநர் இமயத்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்து, கைகூப்பித் தனது மரியாதையையும், கண்ணீர் அஞ்சலியையும் செலுத்தினார். பின்னர் பாரதிராஜாவின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்குத் தனது ஆறுதலையும், அரசு சார்பிலான இரங்கலையும் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று பாரதிராஜாவின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பாரதிராஜாவைத் தனது அரசியல் மற்றும் கலை வாழ்வின் வழிகாட்டியாகக் கருதும் சீமான், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பண்ணைபுரத்துக் காலம் தொட்டே பாரதிராஜாவின் நட்பு வட்டத்திலும், அவரது பல காவியங்களுக்குப் பாடலாசிரியராகவும், திரைக்கதை உதவியாளராகவும் இருந்த இயக்குநர் கங்கை அமரன் நேரில் சென்று தனது உயிர் நண்பனின் உடலைப் பார்த்துக் கண்ணீர் விட்டு உருகினார். கோலிவுட்டின் முன்னணித் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
