தி.நகரில் விஜய் ரோடு ஷோ - 10 ஜீப்கள்.. 50 காவலர்கள் புடைசூழப் பரப்புரை! வேட்பாளர் என்.ஆனந்துக்கு வாக்குச் சேகரிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் என்.ஆனந்தை ஆதரித்து இன்று பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார்.
முன்னதாக விஜய் சென்னையில் பிரச்சாரம் செய்தபோது அவரது வீட்டின் முன் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், தவெக தரப்பில் பாதுகாப்பு குறைபாடு குறித்த புகாரும் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பை உச்சகட்டமாகப் பலப்படுத்தியிருந்தனர். விஜய்யின் பிரச்சார வாகனத்தைச் சுற்றி 2 உதவி ஆணையர்கள், 6 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 50 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 10 போலீஸ் ஜீப்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று, எந்தவொரு அசம்பாவிதமும் நேராதவாறு கண்காணித்தனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலும், தி.நகரின் முக்கிய சாலைகளில் விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். "எங்கள் ஓட்டு தவெக-விற்கே" என்ற முழக்கங்களுடன் வேட்பாளர் என்.ஆனந்துக்கு விஜய் ஆதரவு கோரினார். ரோடு ஷோ சென்ற வழியெங்கும் மலர் தூவி ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விஜய்யின் இந்த திடீர் ரோடு ஷோ மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு காரணமாக, தி.நகர், பாண்டி பஜார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
