"செங்கோட்டையன் மூலம் தூது அனுப்பிய விஜய்" - செல்லூர் ராஜூ!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய செல்லூர் ராஜூ, "கூட்டணி அமைப்பதற்காக அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனை வைத்து தவெக தரப்பில் நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், தனக்குக் கூட்டணி அமையவில்லை என்றவுடன், 'நரி திராட்சைப் பழம் புளிக்கும்' என்று சொன்ன கதையாக, தற்போது கூட்டணி எல்லாம் எடுபடாது என்று விஜய் பேசிக் கொண்டிருக்கிறார்" என்று விமர்சித்தார்.
"மதுரைக்கு வந்த முதலமைச்சரிடம், கடந்த ஆண்டுகளில் தராத 2000 ரூபாய் கோடை நிதியை இந்தத் தேர்தல் நேரத்தில் மட்டும் ஏன் கொடுக்கிறீர்கள் என்று யாராவது கேட்டீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார். மதுரையில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினார்.

"ஓ. பன்னீர்செல்வத்தை நாங்கள் மறக்கவே மாட்டோம். இவரைப் போய் ஜெயலலிதா முதலமைச்சர் ஆக்கினாரே என்று நினைத்து நினைத்து ஒவ்வொரு நாளும் வருந்துகிறோம்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாஜக அரசு நிறைய திட்டங்களைக் கொடுத்துள்ளதாகப் பாராட்டிய அவர், ஜெயலலிதா சொன்ன 'மோடியா லேடியா' என்பது தேர்தல் நேரத்து முழக்கம் மட்டுமே என்றும், அரசியலில் சூழலுக்கு ஏற்ப அனைத்தும் மாறும் என்றும் தெரிவித்தார். சசிகலா புதிய கட்சித் தொடங்கியது குறித்த கேள்விக்கு, "நான் கிராமத்தில் இருந்தேன், அங்கே டவர் கிடைக்கவில்லை. காலையில் பேப்பர் கூட பார்க்கவில்லை, அதனால் எனக்கு அது பற்றித் தெரியாது" என்று கூறி சிரிப்பை ஏற்படுத்தினார்.
கூட்டம் கூடுவதை வைத்து ஒரு கட்சியின் பலத்தைத் தீர்மானிக்க முடியாது என்றும், அது வாக்குகளாக மாறாது என்றும் கூறிய அவர், தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு மிகப்பெரிய எழுச்சி இருப்பதாகவும் உறுதிபடத் தெரிவித்தார்.
