தமிழகத்தில் விஜய் ஜெயிக்கணும்.. எனக்கு ஓட்டு இல்லையேன்னு வருத்தமா இருக்கு - நடிகை ஐஸ்வர்ய லட்சுமி பேட்டி!
'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்ய லட்சுமி, இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசியல் மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை நோக்கித் களம் கண்டுள்ள நடிகர் விஜய்க்குத் திரைத்துறையினரிடையே ஆதரவு பெருகி வருகிறது. இது குறித்துப் பேசிய ஐஸ்வர்ய லட்சுமி, "எனக்குத் தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை ரொம்பவே பிடிக்கும். அவர் மீது எனக்குப் பெரிய மரியாதை உண்டு. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அமோக வெற்றி பெற வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய ஆசை" என்று கூறினார்.
தனது வாக்களிக்கும் உரிமை குறித்துப் பேசிய அவர், "நான் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவள் என்பதால், எனக்குத் தமிழகத்தில் வாக்குரிமை இல்லை. விஜய்யின் அரசியலுக்கு ஆதரவாக எனது வாக்கைச் செலுத்த முடியவில்லையே என்பது எனக்கு வருத்தமாக உள்ளது. ஆனால், முடிவுகள் அவருக்குச் சாதகமாக அமையும் என நம்புகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டுள்ள தவெக, ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக-விற்குப் பலத்த சவாலை அளித்துள்ளதாகக் கருதப்படுகிறது. வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், ஐஸ்வர்ய லட்சுமி போன்ற வெளிமாநிலக் கலைஞர்களும் தவெக வெற்றி பெற வேண்டும் என விரும்புவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
