ஆட்சியமைக்க ஆதரவு கேட்டு திருமாவளவனிடம் விஜய் பேச்சு... விசிக-வின் முடிவு என்ன?

 
திருமாவளவன் விஜய் திருமாவளவன் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை எட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஆளுநர் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைக் கோரியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில், நிலையான ஆட்சியை வழங்க விசிக ஆதரவு அளிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆளுநர் விஜய்

விஜய்யின் கோரிக்கையைத் தொடர்ந்து, இது குறித்துத் தனது கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசித்துவிட்டு, முறைப்படி முடிவு அறிவிக்கப்படும் எனத் திருமாவளவன் பதிலளித்துள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே இன்று காலையில், "மக்கள் தீர்ப்புக்கு ஆளுநர் மதிப்பு அளிக்க வேண்டும்" எனத் திருமாவளவன் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தார். இந்தச் சூழலில், இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த நேரடிப் பேச்சுவார்த்தை, தமிழக அரசியலில் புதிய கூட்டணியோ அல்லது வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் முறையோ உருவாவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

திருமாவளவன்

திமுக கூட்டணியில் உள்ள விசிக, தவெக-விற்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதேசமயம், விசிக-வின் இந்த நகர்வு திமுக கூட்டணியில் எந்த மாதிரியான தாக்கத்தை உருவாக்கும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது.