இன்று திருச்சி கிழக்கில் விஜய் பிரசாரம்... ரூட் மேப் தயார்.. தேர்தல் ஆணையம் விதித்த 27 நிபந்தனைகள் என்னென்ன?!

 
விஜய் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தான் போட்டியிடும் திருச்சி கிழக்குத் தொகுதியில் இன்று (ஏப்.19, ஞாயிற்றுக்கிழமை) பிரம்மாண்ட பிரசாரம் மேற்கொள்கிறார். நேற்று சென்னை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த நிலையில், இன்று திருச்சியில் தனது தேர்தல் வேட்டையைத் தொடங்குகிறார்.

விஜய்
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சி வந்தடைகிறார். பின்னர், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை திருச்சி கிழக்குத் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் நின்றபடி 'தாமரை' மற்றும் மற்ற எதிரணி வேட்பாளர்களுக்குச் சவால் விடும் வகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

விமான நிலையம் அருகே உள்ள வயர்லஸ் சாலையில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் விஜய், தென்றல்நகர், கே.கே.நகர் பேருந்து நிலையம், காஜாமலை சாலை, இ.வி.ஆர். கல்லூரி சாலை, தமிழ்நாடு ஓட்டல், கோழிப்பண்ணை சாலை மற்றும் கொட்டப்பட்டு ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

விஜய் பிரச்சாரம்

விஜய்யின் இந்த பிரசாரத்திற்குத் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறை தரப்பில் சுமார் 27 கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கொடிகள், பேனர்கள் வைக்கக்கூடாது. வெடிபொருட்கள் பயன்படுத்தத் தடை. அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது.

நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய்யைக் காண அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் இப்போதே குவியத் தொடங்கியுள்ளதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.