நாளை நெல்லையில் விஜய் மெகா பொதுகூட்டம்... 51 நிபந்தனைகளுடன் அனுமதி - செங்கோட்டையன் ஆவேசம்!

 
செங்கோட்டையன் விஜய் செங்கோட்டையன் விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாளை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 22 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளைத் தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார்.

நெல்லை பாளையங்கோட்டையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கங்கைகொண்டான், ராஜகோபாலபுரம் மற்றும் கே.டி.சி நகர் ஆகிய பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்களைச் செங்கோட்டையன் இன்று நேரில் பார்வையிட்டார்.

செங்கோட்டையன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நெல்லையில் விஜய் பிரசாரம் செய்யக் காவல்துறை தரப்பில் மொத்தம் 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளை விட விஜய்யின் பிரசாரத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன என்று தெரியவில்லை. இருப்பினும், அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டுப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்படும்."

"தமிழக மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை விரும்புகிறார்கள். 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. விஜய் நாட்டை ஆள வேண்டும் என்பது மக்களின் ஆசையாக உள்ளது. எனது தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் மக்கள் எனக்கு ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது."

செங்கோட்டையன்

நாளை காலை 10 மணி அளவில் நெல்லையில் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் தமிழகத்தில் விஜய்யின் முதல் பெரிய தேர்தல் பொதுக்கூட்டம் இது என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களைத் தவிர மற்ற இடங்களில் பிரசாரம் செய்வதில் பெரிய அளவில் சிக்கல்கள் இல்லை என்றாலும், நெல்லையில் விதிக்கப்பட்டுள்ள இந்த 51 நிபந்தனைகள் தவெக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.