"விஜய் பெரிய விஷயங்களுக்காகப் பிறந்தவர்!" - நடிகை சமந்தா நெகிழ்ச்சி!

 
சமந்தா சமந்தா

தமிழக முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சந்தித்த பிறகு, நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "விஜய் சார் திரையில் வெறும் கதாநாயகனாக இருப்பதற்காகப் பிறந்தவர் அல்ல, அவர் பெரிய விஷயங்களைச் சாதிப்பதற்காகவே பிறந்தவர்" எனச் சமந்தா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருடனான சந்திப்பு குறித்து நடிகை சமந்தா தனது சமூக ஊடகப் பக்கத்தில், இன்று நான் சென்னைக்கு வந்தபோது, எனக்குள் ஒரு பெரும் மகிழ்ச்சி உணர்வு ஏற்பட்டது. அதற்கு மிக முக்கியக் காரணம், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் சாரை நான் சந்திக்கப் போகிறேன் என்பது தான்.

விஜய் சார் திரையில் வெறும் கதாநாயகனாக இருப்பதற்காக மட்டுமே பிறந்தவர் அல்ல என்பதை நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். அவருடைய ஆற்றல், ஆளுமை மற்றும் மக்கள் அவருக்கு அளிக்கும் பிரம்மாண்ட வரவேற்பு ஆகியவற்றைப் பார்க்கும்போது, அவர் ஏதோ ஒரு பெரிய உன்னத விஷயத்திற்காகப் பிறந்தவர் என்றே எனக்கு எப்போதும் தோன்றியது.

சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது, அதைத் துறந்துவிட்டு முழுநேர அரசியலில் களம் இறங்கிய முதலமைச்சரின் துணிச்சலைச் சமந்தா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

"முற்றிலும் புதிய ஒரு களத்தில் அடியெடுத்து வைக்கத் தேவைப்படும் துணிச்சல்தான் என்னை மிகவும் ஊக்குவிக்கிறது. நாம் ஏற்கனவே தேர்ச்சி பெற்ற ஒரு துறையை விட்டுவிட்டு, சவால்களும் பந்தயங்களும் அதிகமாக உள்ள புதியதொரு சவாலை  ஏற்றுக் கொள்வது சாதாரண விஷயமல்ல. அது எளிதானது என்பதால் அவர் செய்யவில்லை, மாறாகத் தம்மால் மக்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் ஆழமாக நம்புவதால் மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளார்."

சமந்தா

தொடர்ந்து தனது பதிவில், நம் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில், நாம் அனைவரும் சுயநலத்தைத் தாண்டிச் சமுதாயத்திற்காக இன்னும் அதிகமாகச் செய்ய அழைக்கப்படுகிறோம். ஆனால், மிகச் சிலரே உண்மையில் அந்த அழைப்பிற்குச் செவிசாய்க்கிறார்கள். விஜய் சார், அவர் மீது ஏற்கனவே நம்பிக்கை வைத்திருப்பவர்களைக் கூடத் தனது செயல்பாடுகளால் ஆச்சரியப்படுத்துவார் என்று எனக்குத் தோன்றுகிறது. அவர் வகிக்கும் பதவியால் அல்ல, மாறாக அவர் அதை அணுகும் தூய்மையான நோக்கத்தால்தான் மக்கள் மனதில் நிற்பார்.

முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது மக்கள் பாதையில் உறுதியாக நிலைத்திருக்க அவருக்குத் தேவையான மன வலிமையும், ஞானமும், தைரியமும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன். மேலும், இதைப் பார்க்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் தொடங்கிய ஆரம்பக் கனவை விட வாழ்க்கை மிகவும் பெரியது என்பதை இந்த நிகழ்வு உங்களுக்கு நினைவூட்டட்டும்.

தமிழ் சினிமாவில் விஜய்யுடன் இணைந்து கத்தி, மெர்சல், தெரி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் ஜோடியாக நடித்த சமந்தா, தமிழக முதலமைச்சராக உள்ள விஜய்யைச் சந்தித்துப் பாராட்டியுள்ளது அரசியல் மற்றும் திரை உலக வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.