முதலமைச்சராக முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய் - சட்டசபையில் இன்று புதிய அறிவிப்பு வெளியாகிறதா? எகிறும் எதிர்பார்ப்பு!
தமிழகத் திரையுலகின் உச்ச நடிகராக இருந்து, தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள விஜய், தனது 52-வது பிறந்தநாளை இன்று ஜூன் 22ல் கொண்டாடுகிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள அவரது கட்சியினரும் தொண்டர்களும் தற்போதே கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளனர்.
அரசியல் பிரவேசம் முதல் அரியணை வரை
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த விஜய், கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.
விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநாட்டையும், மதுரையில் இரண்டாவது மாநாட்டையும் நடத்தி ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் அதிரச் செய்தார். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் ஆகியோரைத் தனது கட்சியின் கொள்கைத் தலைவர்களாக அறிவித்து நிதானமாக அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைத்தார்.

கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் சட்டசபைப் பொதுத்தேர்தலை எதிர்கொண்ட விஜய், ‘விசில்’ சின்னத்தில் தனித்துக் களம் கண்டார். "உங்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துள்ளேன், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்ற அவரது உருக்கமான பிரசாரம் மக்கள் மனதைத் தொட்டது. திரையில் மட்டுமல்லாமல் தேர்தலிலும் விஜய் ‘சர்க்கார்’ அமைய மக்கள் அமோக ஆதரவு அளித்தனர்.
கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று, ஒரு மாத கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் முதலமைச்சர் விஜய். இன்று 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்குத் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று சட்டப்பேரவையில் சபாநாயகர், அமைச்சர்கள், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சருக்கு முறைப்படி வாழ்த்து கூற உள்ளனர்.

முதலமைச்சராகத் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய், இன்று நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தொடரில் தமிழக மக்களுக்கான முக்கிய மக்கள் நலத்திட்டப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று முதல்வர் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தவெக சார்பில் ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்குதல், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்தல் எனப் பல்வேறு சமூக நலப்பணிகளுக்கு மாவட்டச் செயலாளர்கள் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
