மாலை 4:30-க்கு ராஜ்பவன் செல்கிறார் விஜய்... ஆளுநருடன் 3-வது முறையாகச் சந்திப்பு!

 
விஜய் ஆளுநர் விஜய் ஆளுநர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும் ஆட்சி அமைப்பதில் நீடித்து வந்த இழுபறி, இன்று ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், இன்று மாலை 4:30 மணிக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை நேரில் சந்திக்கிறார்.

தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தவெக-விற்கு, காங்கிரஸ் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. தற்பொழுது இடதுசாரி கட்சிகளான சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPIM) ஆகியவையும் விஜய்க்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்

இடதுசாரி கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரைச் சந்திக்கும் விஜய், தங்களுக்குப் பெரும்பான்மை பலம் (118-க்கும் மேல்) இருப்பதை நிரூபித்து, தன்னை ஆட்சி அமைக்கவும், முதலமைச்சராகப் பதவி ஏற்கவும் அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தவெக-விற்கு ஆதரவு அளிப்பது உறுதியானால், அது திமுக தலைமையிலான கூட்டணியின் முற்றிலுமான உடைவைக் குறிக்கும். கடந்த சில மணி நேரங்களாக மயிலாடுதுறை போன்ற இடங்களில் திமுக - காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் வெடித்துள்ள சூழலில், விஜய்யின் இந்த ராஜ்பவன் பயணம் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

விஜய்

விஜய்யின் வருகையை முன்னிட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையைச் சுற்றி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவெக தொண்டர்கள் ராஜ்பவன் நோக்கி வரக்கூடும் என்பதால் அந்தப் பகுதியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மாலை 4:30 மணி சந்திப்பிற்குப் பிறகு, ஆளுநர் மாளிகை வாயிலில் விஜய் செய்தியாளர்களைச் சந்திப்பாரா அல்லது அறிக்கை வெளியிடுவாரா என்பது தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.