10, 12-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விரைவில் விருது வழங்குகிறார் விஜய்

 
விருது விஜய்

தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய், பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் கல்வி விருது வழங்கும் விழா, இந்த ஆண்டும் 4-வது முறையாக நடைபெறவுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆயத்தப் பணிகளில் தவெக நிர்வாகிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே, தனது 'விஜய் மக்கள் இயக்கம்' மூலமாக ஏழை எளிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்துச் சாதனை படைத்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி அவர் கௌரவிக்க உள்ளார்.

இதற்காகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் முழுமையான விவரங்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலைச் சேகரிக்கும் பணியில் தவெகவின் தலைமை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் முழுமையான பட்டியல் தயார் செய்யப்பட்டு, தலைமை அலுவலகத்தால் சரிபார்க்கப்பட்ட பிறகு, விழா நடைபெறும் அதிகாரப்பூர்வத் தேதி மற்றும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் அட்டவணை விவரங்கள் இன்னும் சில நாள்களில் முதலமைச்சர் விஜய்யால் நேரடியாக வெளியிடப்படவுள்ளது.

இந்த ஆண்டுக்கான பிரம்மாண்ட கல்விப் பரிசளிப்பு விழா, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டப வளாகத்தில் நடத்துவதற்குத் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இடத்தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பாதுகாப்பு மற்றும் மேடை உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நடைபெற்ற விழாக்களில், மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு வைர மோதிரம் மற்றும் உயர்கல்விக்கான முழு நிதியுதவிகளை விஜய் வழங்கியிருந்தார். மேலும், மேடையில் விடிய விடிய நின்று ஒவ்வொரு மாணவருடனும் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களின் பெற்றோர்களிடம் நலம் விசாரித்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

தற்போது  தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் கல்விப் பரிசளிப்பு விழா இது என்பதால், இந்த ஆண்டின் சாதனை மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் முதலமைச்சரின் கைகளால் விருது பெற மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.