‘ப்ரியமுடன் விஜய்’... குஷியில் மாணவர்கள்... இன்று கொளத்தூரில் கேக், வாழ்த்து அட்டை வழங்கி குழந்தைகள் தின விழாவைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!
நாடு முழுவதும் நாளை குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்றே (நவம்பர் 13) குழந்தைகள் தின விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் புதிய திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் விஜய் இன்று சென்னை கொளத்தூரில் தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சர் விஜய்யின் ஆணைக்கிணங்க, தமிழகப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி குழந்தைகள் தினத்தைக் கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.9.27 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, தரமான முறையில் தயாரிக்கப்பட்ட தலா 45 கிராம் எடையுள்ள கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட 61,84,566 பேருக்கு கேக்குகள் வழங்கப்பட உள்ளன. சென்னையில் மட்டும் மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 2.90 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர்.
கேக்குகளுடன் இணைந்து, "All is well confident-ஆ இருங்க - பிரியமுடன் விஜய்" என்ற ஊக்கமளிக்கும் வாசகங்கள் அடங்கிய முதலமைச்சரின் பிரத்யேகக் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகளும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
இன்று காலை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்குத் தனது கைகளால் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

கொளத்தூரில் முதலமைச்சர் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளன.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் நேரடியாகக் கொளத்தூர் தொகுதிக்கு சென்று மாணவர்களுடன் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதோடு, அப்பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். முதலமைச்சரின் வருகையையொட்டி கொளத்தூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
