விஜய் அரசுக்கு ஆதரவு வாபஸ்... எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த சுகுமார்!
தமிழக அரசியல் களம் தற்பொழுது மிக முக்கியமான திருப்பங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், ஆற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார், புதிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அளித்து வந்த தற்காலிக ஆதரவை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளார்.
அதிமுகவில் நிலவி வந்த உள்விவகாரங்கள் காரணமாக, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அணியில் அதிருப்தியாளராக அடையாளப்படுத்தப்பட்டிருந்த ஆற்காடு எம்.எல்.ஏ சுகுமார், தவெக கூட்டணி அரசுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், இன்று அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, மக்கள் தேர்ந்தெடுத்த புதிய அரசுக்குத் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக வழங்கிய ஆதரவை தான் தற்போது முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகச் சுகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையையே ஏற்று, மீண்டும் கட்சியின் முழுநேரப் பணிகளுக்குத் திரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி உடனான இந்தச் சமாதானச் சந்திப்பைத் தொடர்ந்து, சுகுமாருக்குக் கட்சியில் மீண்டும் பழைய முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக அதிருப்தி நடவடிக்கைகள் காரணமாகச் சுகுமாரிடமிருந்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருந்தது.

இபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிமுகவின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி அரசு புதிய அமைச்சரவையுடன் தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்தச் ஆரம்பகட்ட சூழ்நிலையிலேயே, எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பியிருப்பது, ஆளுங்கூட்டணிக்குச் சட்டமன்ற உத்திகள் ரீதியாகப் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
