"விஜய் அரசியலை விட்டே ஓடியிருப்பார்!" - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்!

 
ஆர்.எஸ்.பாரதி

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஜோசப் விஜய்யை நோக்கித் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசுகையில் காரசாரமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "முதலமைச்சர் விஜய் ரீல்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் மட்டுமே அரசியல் செய்து ஆட்சிக்கு வந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். கள யதார்த்தம் இல்லாத அரசியல் இது" என்று சாடினார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தை ஒப்பிட்டுப் பேசிய அவர், தவெக தலைவர் விஜய் மீது அப்போது எவ்வித கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது குறித்தும் பேசினார்.

"நாங்கள் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தபோது இவரைப் பெரிய ஆளாகக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டோம். அதுதான் இவ்வளவு தூரம் பேசக் காரணமாக அமைந்துள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில் விஜய் மீது சட்டரீதியாக ஒரே ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தோம் என்றால் கூட, அவர் அந்த பயத்திலேயே அரசியலை விட்டே தூர ஓடிப் போயிருப்பார்" என்று ஆர்.எஸ்.பாரதி விமர்சித்தார்.