நாளை கடலூர், தருமபுரியில் விஜய் ‘ரோடு ஷோ’... ஹெலிகாப்டர் மூலம் சூறாவளிப் பயணம் - 19ல் திருவள்ளூரில் வாக்கு சேகரிப்பு!

 
விஜய் விஜய்


தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை (ஏப்ரல் 18) கடலூர் மற்றும் தருமபுரி ஆகிய முக்கியத் தொகுதிகளில் பிரம்மாண்டப் பிரசாரம் மேற்கொள்கிறார். வேட்புமனுத் தாக்கல் முடிந்து, தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது:

தவெக விஜய்

சென்னையில் இருந்து நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் கடலூர் செல்லும் விஜய், அங்குத் திறந்த வேனில் அமர்ந்து ‘ரோடு ஷோ’ நடத்துகிறார். முக்கியச் சந்திப்புகள் வழியாகப் பயணித்துத் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

கடலூர் பிரசாரத்தை முடித்த கையோடு, மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் தருமபுரி செல்கிறார். அங்கும் வேன் மூலம் ரோடு ஷோ சென்று பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை), சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சாலை மார்க்கமாகக் காரில் திருவள்ளூர் செல்லும் விஜய், அங்கும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

விஜய் விசில்

நேற்று தனது கட்சியின் முதல் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய், அதில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை முன்வைத்துள்ளார். 60 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை. ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவியாக 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுச் சேலை. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன். அரசுத் திட்டங்களின் பலன்கள் வீடு தேடி வரும் நடைமுறை மற்றும் ஊழலற்ற நிர்வாகம்.

சமீபத்தில் சென்னையில் விஜய் நடத்திய ரோடு ஷோக்களின் போது, தேர்தல் விதிகளை மீறியதாக அவர் மீதும் கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், நேற்று தி.நகர் ரோடு ஷோவில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திப் பெண்ணிடம் 6 சவரன் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நாளை கடலூர் மற்றும் தருமபுரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.