“திமுக ஒரு லிமிடெட் கம்பெனி.. திசை திருப்பும் முதலீட்டுக் கழகம்’ - விஜய் ஆவேசம்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் திமுக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் நேரத்தில் நடக்கும் அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் திமுக-வின் தேர்தல் நாடகங்கள் குறித்து அவர் சாடியுள்ளார்.

திமுக-வை நேரடியாகச் சாடிய விஜய், “தேர்தல் நேரத்தில் மக்களைக் குழப்புவதற்காகப் பல்வேறு திசைதிருப்பல் வேலைகளில் ஈடுபடும் ‘திசை திருப்பும் முதலீட்டுக் கழகம்’ இது” எனப் புதிய அடைமொழி கொடுத்து விமர்சித்துள்ளார்.“பெரியார், காமராஜர், அண்ணா விதைத்த சமூக நீதி மண்ணில் பாசிச சக்திகள் காலூன்றவே இயலாது. அதேபோல் பாசிச மனநிலை கொண்ட மக்கள் விரோத திமுக-விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி” எனத் தெரிவித்துள்ளார்.
தவெக வேட்பாளர்களின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பது, கடைசி நேரத்தில் ரத்து செய்வது மற்றும் அதிகாரிகளை வைத்து நெருக்கடி கொடுப்பது என திமுக ‘பரம்பரை தில்லுமுல்லு’ செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.“தான் என்ற அகந்தையில் ஆடும் அரசியல் சூதாடிகள் அனைவரும், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ‘விசில் புயலில்’ (தவெக சின்னம் தொடர்பான குறிப்பு) வீழ்வது உறுதி” என எச்சரித்துள்ளார்.

திமுக-வை ஒரு “லிமிடெட் கம்பெனி” என்று குறிப்பிட்ட விஜய், பொய் வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றும் இந்த அரசை, மக்கள் இந்தத் தேர்தலில் ‘லிமிட்’ செய்து வீட்டுக்கு அனுப்புவார்கள் எனத் தனது அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.தவெக-வின் பிரசாரத்தைத் தடுத்தாலும், ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் தாமாக முன்வந்து பிரசாரம் செய்து வருவதாகவும், இது ஒரு மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறியுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
