“தேர்தல் முடிவுக்குப் பிறகு விஜய் வருத்தப்படுவார்!” - பழ.கருப்பையா
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தனது முடிவைக் குறித்து வருத்தப்பட நேரிடும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும், மூத்த அரசியல்வாதியுமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவம் கொண்ட பழ.கருப்பையா, செய்தியாளர்களிடம் பேசியபோது, “தனித்துப் போட்டியிடுவதை விட, அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பிறகு ஆட்சியைப் பிடியுங்கள் என்று நான் விஜய்யிடம் முன்பே கூறினேன். பலமான ஒரு கூட்டணியின்றி களம் காண்பது கடினம்.”
மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள், அதிமுக-வுடன் கூட்டணி வைத்ததால் தான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை எட்டினார் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ‘அதிமுக-வுடன் கூட்டணி வைத்திருக்கலாமோ’ என்று விஜய் நிச்சயம் வருத்தப்படுவார்” என அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் தனது பிரசாரங்களில் திமுக-வை ‘லிமிடெட் கம்பெனி’ என்றும், மற்றவர்களைப் ‘பாசிச சக்திகள்’ என்றும் விமர்சித்து வரும் சூழலில், அதிமுக-வின் ஆதரவாளரான பழ.கருப்பையா இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் திமுக கூட்டணி 30 தொகுதிகளைக் கைப்பற்றும் என நக்கீரன் கருத்துக்கணிப்பு தெரிவிக்கும் நிலையில், மறுபுறம் விஜய்யின் தனித்துப் போட்டி அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
