திருமண ஜோடிக்கு பிரச்சார வேனில் ஏற்றி வாழ்த்து சொன்ன விஜய்... நெகிழ்ச்சி !
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் விறுவிறுப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பனையூர் இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட அவர், பாதி வழியிலேயே தனது பிரசார வேனுக்கு மாறி தொண்டர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். வழியெங்கும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பூக்களை தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது சாலையோரம் மணக்கோலத்தில் காத்திருந்த ஒரு புதுமண தம்பதியைக் கண்ட விஜய், உடனடியாக வேனை நிறுத்தச் சொன்னார்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த தம்பதியை தனது பிரசார வேனுக்குள் அழைத்த விஜய், அவர்களுக்கு அன்போடு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பார்த்த அங்கிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். விஜய்யின் இந்த எளிமையான அணுகுமுறை தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த திருமண ஜோடி தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் இது என்று நெகிழ்ந்து போயினர். விஜய்யின் வருகையால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

பொன்னேரி, வில்லிவாக்கம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் விஜய் மிதந்து வருவதால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது வாகனத்தில் இருந்தபடியே இருபுறமும் நின்ற மக்களைப் பார்த்து கையசைத்தபடி அவர் முன்னேறி வருகிறார். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே விஜய்யின் இந்த தேர்தல் பயணம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
