ஒரே ஒரு சாய்ஸ்... அதுதான் விசில்... வாக்காளர்களுக்கு விஜய் உருக்கமான வேண்டுகோள்!

 
vijay vijay

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது இறுதி கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் தனது சொந்த பந்தங்களாகிய வாக்காளர்கள் அனைவரும் வரும் தேர்தலில் தனது கட்சியின் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களின் நலனுக்காகவே தான் அரசியலில் இறங்கியுள்ளதாகவும் எவ்வித அழுத்தங்களுக்கும் தான் அடிபணியப் போவதில்லை என்றும் அவர் அந்த அறிக்கையில் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தமிழகம் தேர்தல்

தமிழக அரசியல் களத்தில் தான் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகளை பட்டியலிட்டுள்ள விஜய் சமூக நீதியை காக்கும் கோட்டையாக தனது கட்சி விளங்கும் என்று உறுதி அளித்துள்ளார். மற்ற சின்னங்களுக்கு வாக்களிப்பது பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவாக முடியும் என்று எச்சரித்துள்ள அவர் குடும்பம் குடும்பமாக வந்து விசில் சின்னத்தில் வாக்களித்து புதிய சரித்திரம் படைக்க அழைப்பு விடுத்துள்ளார். ஊழல் மற்றும் பாசிச சக்திகளை மக்கள் தங்களது வாக்குகள் மூலம் வீழ்த்த வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்

வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தனது கட்சி ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்று விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய் தனது வெற்றி நிச்சயம் என்றும் தமிழக மக்களின் பேராதரவு தமக்கு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.