பணநாயகம் புதைக்கப்பட்டது... வரலாற்று வெற்றிக்குப் பின் விஜய் நெகிழ்ச்சி!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் உணர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசியலில் ஒரு கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக் கொண்டிருந்த 'பணநாயகம்' தற்போது ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டதாக அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மக்களின் இந்தத் தீர்ப்பு ஜனநாயகத்தின் வெற்றியாகவே தான் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தொடங்கியது முதல் தன்னை ஏளனம் செய்தவர்களுக்கும், அவதூறு பரப்பியவர்களுக்கும் இந்த வெற்றி தகுந்த பதிலடி என விஜய் கூறியுள்ளார். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பிக் களமிறங்கிய தங்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் தாயன்போடு வாக்களித்துள்ளதாக அவர் நெகிழ்ந்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் நிலவிய பழைய அரசியல் கலாசாரத்தை மாற்றி, ஒரு நேர்மையான மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாகத் தவெக உருவெடுத்துள்ளதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வாக்களித்த மக்களுக்குத் தனது வாழ்நாள் நன்றியை விஜய் காணிக்கையாக்கியுள்ளார். அதேபோல், இந்தத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கத் தவறிய மக்களும் வரும் காலங்களில் தங்களை நேசிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கத் தயாராக உள்ள நிலையில், விஜய்யின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
