ஆட்சியைப் பிடிக்க விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு... தமிழக அரசியலில் பெரும் திருப்பம்!

 
தவெக தவெக

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட 10 இடங்கள் குறைவாக இருப்பதால் இழுபறி நீடித்தது. இந்தச் சூழலில் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தவெக-வுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து முடிவெடுத்துள்ளது. இந்த ஆதரவின் ஒரு பகுதியாக அமைச்சரவையில் 2 இடங்கள் மற்றும் அரசு வாரியங்களில் சில பதவிகளை காங்கிரஸ் கோரியுள்ளதாகத் தெரிகிறது. அதே வேளையில் பாஜக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளுடன் விஜய் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையையும் காங்கிரஸ் விதித்துள்ளது.

காங்கிரஸ் மட்டுமன்றி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் விஜய்யின் பலம் 118-ஐத் தாண்டி அவர் எளிதாக ஆட்சியமைக்க முடியும். தமிழக அரசியலில் நீண்ட காலமாக நீடித்து வந்த திமுக மற்றும் அதிமுக-வின் ஆதிக்கத்தை முறியடித்து முதன்முறையாகப் புதிய கட்சி ஒன்று ஆட்சியைக் கைப்பற்றத் தயாராகி வருகிறது.