கோட்டையை நோக்கி விஜய்... தவெக எம்.எல்.ஏ.க்களுடன் இன்று அவசர ஆலோசனை.!

 
விஜய் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று மதியம் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் மிக முக்கியமான அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தவெக சார்பில் வெற்றி பெற்றுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்சி அமைப்பதற்கான இறுதிக்கட்ட நகர்வுகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.

தற்போதுள்ள அரசியல் சூழலில், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதரவைத் திரட்டுவதில் விஜய் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

ஒருபுறம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில், விஜய் தனது எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைத்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறார். குதிரை பேரக் குற்றச்சாட்டுகள் மற்றும் போலி கடிதப் புகார்கள் குறித்து உறுப்பினர்களிடம் அவர் எச்சரிக்கை விடுப்பார் என்றும் தெரிகிறது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு தவெக தரப்பில் இருந்து ஒரு மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகலாம் என்பதால், தமிழக அரசியல் களம் தற்போது பனையூரை நோக்கித் திரும்பியுள்ளது.