60 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி ... கோட்டைக்குச் செல்லும் விஜய்... இன்று தமிழக முதல்வராகப் பதவியேற்பு... சென்னை முழுவதும் 20 இடங்களில் நேரலை!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (மே 10) காலை 10:00 மணியளவில் பதவியேற்கிறார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆளுநர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், முதலமைச்சருடன் புதிய அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைப் பொதுமக்கள் அனைவரும் கண்டு மகிழும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நகரின் முக்கியப் பகுதிகளில் நேரடி ஒளிபரப்பிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான அண்ணாநகர் டவர் பார்க், மெரினா கடற்கரை, கோயம்பேடு, சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் தி.நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட 20 இடங்களில் பிரம்மாண்டமான எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் நிறுவப்பட்டுள்ளன. பெசன்ட்நகர் கடற்கரை, திருவான்மியூர், வடபழனி, சோழிங்கநல்லூர், போரூர் மற்றும் மாதவரம் போன்ற பகுதிகளிலும் இந்த நேரடி ஒளிபரப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரங்கிற்கு வர முடியாத லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே இந்த விழாவைக் கண்டு களிக்கலாம்.

பதவியேற்பு விழா நடைபெறும் அதே நேரத்தில், மாநகராட்சி அறிவித்துள்ள இந்த 20 இடங்களிலும் நேரடி ஒளிபரப்பு தடையின்றித் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கத்திப்பாரா மேம்பாலம், செம்மொழி பூங்கா, தீவுத்திடல் மற்றும் மயிலாப்பூர் போன்ற முக்கிய இடங்களிலும் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளதால் சென்னை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக இந்தச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகச் சென்னை மாநகராட்சி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
