முதல் கையெழுத்திலேயே அதிரடி காட்டிய விஜய்... 200 யூனிட் மின்சாரம் இலவசம்!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று (மே 10) கோட்டைக்கு வந்தவுடன் தனது மக்கள் பணியை அதிரடியாகத் தொடங்கினார். பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு தலைமைச் செயலகம் சென்ற அவர், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மிக முக்கியமான 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். முதற்கட்டமாகத் தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு எவ்விதக் கட்டணமும் இல்லை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவில் அவர் கையெழுத்திட்டுப் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்தார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டிய முதலமைச்சர் விஜய், இதற்காக 'சிங்கப்பெண்' என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்ற கோப்பிலும் கையெழுத்திட்டார். இந்தப் படையானது மாநிலம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்கவும் பிரத்யேகமாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு இனி ஒரு புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாகத் தமிழகத்தை அச்சுறுத்தி வரும் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியாகப் போதைப்பொருள் தடுப்புப்படை அமைக்கப்படும் என்ற உத்தரவில் அவர் கையெழுத்திட்டார். இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை வேரோடு அழிக்க இந்தப் படை தீவிரமாகக் களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற முதல் நாளிலேயே மக்கள் நலன் சார்ந்த 3 முக்கியத் திட்டங்களை அறிவித்த விஜய்யின் இந்த வேகம், தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
