வரலாற்றுத் தருணம்...சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-வாகப் பதவிப் பிரமாணம் எடுத்தார் முதலமைச்சர் விஜய்!

 
vijay vijay

தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று (மே 11) காலை 9:30 மணிக்குச் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் தொடங்கியது. தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்காக விஜய் அவைக்கு வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து, சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய எம்.எல்.ஏ-க்கள் மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வத்துடன் அவைக்கு வந்தனர்.

சட்டமன்ற வளாகத்திற்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்த போது, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவைக்கு வந்து தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர். தற்காலிகச் சபாநாயகர் கருப்பையா முன்னிலையில், முதலமைச்சர் விஜய் முதலில் எம்.எல்.ஏ-வாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு உறுதிமொழி மொழிந்தார்.

அதனைத் தொடர்ந்து, மற்ற உறுப்பினர்களும் வரிசையாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு வருகின்றனர். புதிய உறுப்பினர்களின் வருகையால் சட்டமன்றமே இன்று புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. இன்றைய பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, நாளை (மே 12) சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுநரின் உத்தரவுப்படி மே 13-ஆம் தேதிக்குள் விஜய் தலைமையிலான புதிய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளதால், இந்த வாரக் கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.