தமிழக அரசியலில் புதிய திருப்பம் .... மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார் முதல்வர் விஜய்... !
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று (மே 11) நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அவை நடவடிக்கைகள் முடிந்தவுடன் பிற்பகல் 2:30 மணி அளவில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் நீண்டகாலமாகப் பகைமை பாராட்டி வந்த இரு துருவங்களுக்கு இடையே நிகழப்போகும் இந்தச் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் முதல்வர் விஜய் நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. மூத்த அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதோடு, மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் அவர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வரிசைகள் மாற்றப்பட்டுள்ள சூழலில், இத்தகைய நாகரிகமான அரசியல் சந்திப்புகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

கோட்டை வளாகத்தில் இன்று காலை எம்.எல்.ஏ-வாகப் பதவியேற்றுக் கொண்ட முதலமைச்சர் விஜய், அதன் தொடர்ச்சியாக இந்தச் சந்திப்புகளைத் திட்டமிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இல்லாத போதும், ஒரு மூத்த தலைவராக அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தச் சந்திப்புகள் ஒரு தொடக்கமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
