அரச இலையில் முதல்வர் விஜய்... பீகார் கலைஞரின் பிரமிக்க வைக்கும் வாழ்த்து!

 
vijay vijay

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம், பல்வேறு அரசியல் சவால்களைக் கடந்து 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. நேற்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோசப் விஜய்க்கு, உலகெங்கிலும் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், வட மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் வினோதமான முறையில் விஜய்க்குத் தனது வாழ்த்தைப் பகிர்ந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மணல் மற்றும் இலை ஓவியக் கலைஞர் மதுரேந்திர குமார், விஜய்யின் பதவியேற்பைக் கொண்டாடும் வகையில் ஒரு நுணுக்கமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார். வெறும் 3 சென்டிமீட்டர் அளவுள்ள சிறிய அரச இலையில், முதலமைச்சர் விஜய்யின் முகத்தை மிகத் துல்லியமாகச் செதுக்கி அசத்தியுள்ளார். சுமார் 5 மணி நேரம் இடைவிடாது உழைத்து, இந்த நுணுக்கமான ஓவியத்தை அவர் உருவாக்கியிருப்பது கலை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சி மாற்றத்தை வாழ்த்தும் விதமாக, வட மாநிலக் கலைஞர் உருவாக்கிய இந்த இலை ஓவிய வீடியோ தற்போது இணையதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. சிறிய அரச இலையில் விஜய்யின் உருவம் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்துத் தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் இதனை வைரலாக்கி வருகின்றனர். மொழிகளைக் கடந்து ஒரு கலைஞரின் மூலம் கிடைத்துள்ள இந்தப் பாராட்டு, முதலமைச்சர் விஜய்க்கு கிடைத்துள்ள மற்றுமொரு கௌரவமாகப் பார்க்கப்படுகிறது.