முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.!

 
vijay vijay

 

தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு மத்தியில், சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்குகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கூடும் முதல் கூட்டத்தொடர் என்பதால், மாநிலம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பது போன்ற விவகாரங்களால் பேரவை வளாகத்தில் இன்று அனல் பறக்கும் விவாதங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தொடரின் தொடக்கமாக மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும். அதிமுகவின் இரு அணிகளும் தனித்தனியாக அமர வைக்கப்பட்டிருப்பது மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கப்போகும் முடிவு ஆகியவை இன்றைய கூட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும். போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் மதுக்கடைகள் மூடல் போன்ற அரசின் புதிய அறிவிப்புகள் குறித்து ஆளுங்கட்சி தரப்பில் விரிவான விளக்கங்கள் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேசமயம், பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு விவகாரங்களைக் கையில் எடுத்து அரசைச் சங்கடப்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாதுகாப்பு கருதி சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றி 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் திருப்பங்கள் நிறைந்த இந்தச் சூழலில், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய திசையைத் தீர்மானிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.