அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் விஜய் புகைப்படம்... தமிழக அரசு சுற்றறிக்கை!
தமிழக அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை வைக்க வேண்டும் எனத் தமிழக அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர அரசு சார்ந்த கட்டடங்களில் முதலமைச்சரின் புகைப்படம் இனி இடம்பெறும். இந்த நடைமுறையைச் செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துத் துறைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் எந்த மாதிரியான புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அதற்கான விதிகளையும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரத்யேகப் புகைப்படத்தை அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ புகைப்படம் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியிலான இந்த முக்கிய மாற்றம் தற்போது நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் தொடர்ச்சியாக, பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் நியாய விலைக் கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் முதலமைச்சர் விஜய்யின் படம் வைக்கப்பட உள்ளது. அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து மக்கள் அறியும் இடங்களில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை வைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
