சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு!
முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை, இருவரும் நேரில் ஆஜராகாததால் புதுக்கோட்டை நீதிமன்றத்தால் ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது மனைவியின் பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களது வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இருதரப்பு வாதங்களையும், வழக்குகளையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
